Saturday, July 25, 2009

ஸ்ரீ லக்ஷ்மி நாராயண சுவாமி ஆலயம்


சர்வேஸ்வரன் ஸ்ரீமன் நாராயணன் லோக ஷேமத்திற்காக இக்கலியுகத்தில் அர்ச்ச குறியாக ஒவ்வொரு ஊரில் ஒரு பெயருடன் எழுந்தருளியிருந்து மக்களை ரக்ஷித்து வருவது யாவரும் அறிந்ததே.

அம்மாதிரி கிழக்கில் வட ஸ்ரீரங்கம் என்கின்ற தேவதானத்தில் ஸ்ரீ ரங்கநாதர் ஆலயமும், தெற்கில் மீஞ்சூர் வரதராஜ பெருமாள் ஆலயமும், வடக்கில் பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் ஆலயத்திற்கும் இடையில் உள்ள இலவம்பேடு பகுதியில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் என்ற பெயருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு பல நன்மைகள் ஏற்படும்படி அருள் பாலித்து வந்தார்.



ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் மூலவர் சிலையானது பெருமாளை லக்ஷ்மியும், லக்ஷ்மியே பெருமாளும் அனைத்து கொண்டு இருப்பது போல் சிலை அமைந்துள்ளது எங்கும் காண முடியாத சிறப்பான தோற்றமாகும். இதன்படி பெருமாளும், தாயாரும் மிகவும் சந்தோஷ நிலையில் தரிசிக்க வருகின்ற பக்தர்களுக்கு மிகுந்த ஆனந்தத்தையும், உற்சாகத்தையும் மற்றும் மன நிறைவையும் தந்துவந்ததாக அறியப்படுகிறது. ஆலயம் காலப்போக்கில் பூஜைகள் சரிவர நடைபெறாமல் கேட்பாரற்று சிதிலமடைந்து விட்டது. மிஞ்சி நின்றது மூலவர் கருவறையும் இடிந்த நிலையில் உள்ள கருவறை மற்றும் எதிரில் உள்ள ஸ்ரீகருடாழ்வார் சந்நிதியும் மட்டுமே.



இம்மூலவர் விக்ரகத்தை காணும்போது ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்ரீ திருவேன்கிடமுடையனை போற்றியுள்ளது நமக்கு நினைவிற்கு வரும். அதாவது "அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கையுரைமார்பா" என்ற படலை மெய்யென்று கூறுவது போல் அமைந்துள்ள ஒரு தோற்றம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

இப்படிப்பட்ட பெருமாள் உறைகின்ற திருக்கோயில் கேட்பாரற்று இடிந்த நிலையில் பூஜை ஒன்றும் இல்லாமல் இருப்பது இலவம்பேடு மக்களை குறிப்பாக நடுத்தர வயதுள்ள வாலிபர்களை சிந்திக்க வைத்து. இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஏக மனதாக இந்த ஆலயத்தை புனருந்தாரணம் செய்ய வேண்டும் என்ற ஒரு என்னத்தை தோற்றுவித்தது அந்த ஸ்ரீலக்ஷ்மி நாராயணனுடைய அருளேயாகும்.



அதன்படி ஜனவரி 21, 2007 அன்று பாலாலயம் செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் 23, 2007 முதல் புனருந்தாரண பணி நடைபெற்று வருகிறது. புனருந்தாரண பணியில் கருவறை கோபுரம், மஹா மண்டபம், கருடாழ்வார் சந்நிதி, ஆண்டாள் சந்நிதி, சக்கரத்தாழ்வார் சந்நிதி, ஆஞ்சநேயர் சன்னதி, திருமடைப்பள்ளி மற்றும் ஆலய சுற்றுச்சுவர் போன்ற கைங்கர்யங்களை செய்ய வேண்டும் என்ற தீர்க்கமான முடிவு எடுத்து அதற்காக சேவா சங்கம் ஏற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

எனவே, ஸ்ரீலக்ஷ்மி நாராயண சுவாமி சேவா சங்கம் என்ற ஒரு டிரஸ்டை உருவாக்கி அதனை பதிவும் செய்துள்ளனர். இக்கோயில் அமைய உள்ள கருவறை, முன் மண்டபம், கருவறை கோபுரம் உள்ளிட்ட சிலைகள் செய்யவும், இவைகள் முடிந்தவுடன் கும்பாபிஷேகம் செய்திடவும் சுமார் முப்பது லட்சங்கள் ஆகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திருக்கர்யங்கள் தொடர்ந்து சிறுக சிறுக நடந்து வருகின்றன. நிதி திரட்டலில் சிக்கல் இருப்பினும் தொடர்ந்து கொண்டிருக்கிறது இந்த அளப்பரிய பணி.

1 comment:

  1. Guna:
    Very good report, keep post the latest updates. I would like to know when the trust planning for Kumbabishekam for this temple.

    ReplyDelete